வள்ளலார் என்று இங்குக் குறிப்பிடப்பட்டவர் வடலூர் இராமலிங்க சுவாமிகளே ஆவார். இவர் மக்கள் நல்வழியில் சென்று உய்யும் பொருட்டுத் திருவருட்பா என்னும் சீரிய நூலைப் பாடி அருளியதோடு நில்லாமல், பற்பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வுரைநடை நூல்களில் அமைந்துள்ள கருத்துக்கள் அருமையும் பெருமையும் வாய்ந்தவை. ஆனால், மக்கள் அவற்றைப் பெரிதும் படித்து அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் மனம் முற்றும் அருட்பாவில் தோய்ந்து கிடப்பதே இதற்குக் காரணம். அங்ஙனம் அருட்பாவில் தோய்ந்த மனத்தைச் சிறிது வள்ளலாருடைய உரைநடைகளிலும் திருப்ப வேண்டும் என்னும் எண்ணங் கொண்டே இந்தூல் வள்ளலார் வகுத்த வழிகள் என்னும் பெயருடன் வெளிவருவதாயிற்று. இத்தொகுப்பு உரைநடை நூலில் ஐந்து அரிய பெரிய கட்டுரைகள் அமைந்துள்ளன. அவை 1. திருவருளை எவ்வாறு பெறக் கூடும்? 2. வந்தனை முறை. 3. மெய்ம் மொழியும் ஒழுக்கமும். 4. நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல். 5.உபதேசம் என்பன. இவற்றுள் மெய்ம்மொழியும் ஒழுக்கமும் என்னும் கட்டுரை நேரே அவர் கையால் எழுதப்பட்டதன்று என்றும் அவருடைய அணுக்கத் தொண்டர் ஒருவரால் வள்ளலாரின் திருவார்த்தைகளைக் கொ