அருட்பாச்சிந்தனை என்ற இந்நூல் திருவருட் பாவைக் களமாகக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக இடையறாது ஓடிவந்த தமிழ்ச் சிந்தனைகளின் வரலாறு கூறும் முறை நூலாகும். 'வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ, என்ற படி தொல்காப்பிய வாழை, சங்கவாழை, திருக்குறள் வாழையாக, திருமுறை பிரபந்த வாழையாக, தாயுமானார் வள்ளலார் வாழையாக, தாயுமானார் வள்ளலார் வாழையாக, பாரதியார் பாரதிதாசன் வாழைக்கன்றுகளாக வற்றாது பாய்ந்து வரும் தமிழ் நீரியலைப் பளிங்குப் படுத்துளது இச்சிந்தனை நூல். வாழையடி வாழையாக வந்தாலும் அவற்றின் தாற்றுக் கொழுமைகள் வேறுபடுமன்றோ?
வள்ளலார் உலகிற் பரப்ப எண்ணிய சமரச சுத்த சன்மார்க்க நெறியானது சைவசமயத்திற் கால் கொண்டு வளர்ந்தது என்று வரன்முறை விளக்கம் தரும் பேராசிரியர் வெள்ளைவாரணனார். அருட்பாவினால் பழந்தமிழ்க் கொள்ளைகள் புதுமலர்ச்சி பெற்றதையும், முன்னூல்களில் நுண்ணிதிற் கிடந்த மறைமொழிகள் பலரறிய வெளிப்பாடு ஆனதையும், இதுகாறும் யாரும் காட்டாத தடம் புகுந்து அழுத்தமாக எழுதியுள்ளார். இச்சிந்தனை நூலின் தனிச்சிறப்பு இது.
சன்மார்க்க நெறி பரப்பிய இராமலிங்க