தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்திற்குக் கிடைத்த அப்பரடிகள். அவர் தம் சிந்தனையும் செயலும், எழுத்தும் சொல்லும் மனித குலத்தின் வாழ்வையும் வளத்தையும் மேம்பாட்டையுமே மையமாகக் கொண்டு விளங்குவன.
இன்று தமிழ்கூர் நல்லுலகெங்கணும், தமிழறிந்தோர் வாழும் இடமெல்லாம் அரசியல் மேடையாக இருந்தாலும், அருளியல் மேடையாக இருந்தாலும், சமூக சீர்திருத்த மேடையாக இருந்தாலும், மொழியியல் மேடையாக இருந்தாலும், கருத்து வேறுபாடும் கருத்து மாறுபாடும் உடையவர்களிடையேயும் தவத்திரு அடிகளார் அவர்கள் தோன்றித் தமது புதிய சிந்தனைகளையும், எண்ணங்களையும் தெளிவாக - அழகாக - ஆணித்தரமாக எடுத்துக் கூறி, மேடைக் கலைக்குப் புத்துயிரூட்டும் சித்தராக - புத்துணர்வுகளும் புதிய எண்ணங்களும் பூத்து மலரும் சோலையாகத் திகழ்கிறார்கள்.
தவத்திரு அடிகளார் அவர்கள் கூறுகின்ற சமயம், "மனிதனை மனிதனாக வாழச் செய்வது; மனிதகுல ஒருமைப்பாட்டினை உருவாக்க உதவுவது; சமதர்ம மணம் கமழ்வது; சாதி, குலம், பிறப்பு, எல்லை இவற்றைக் கடந்தது; மனிதனுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பையும் உண்டாக்குவது." இĪ