இது, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகள் இயற்றிய "மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்" என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் முகவுரையினின்றும் எடுக்கப்பட்டது
மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத் தென்றமிழ் மாமறையின் அளப்பரு மாட்சியினை அளந்து கூறிய இராமலிங்க அடிகளின் மேலைத் திருச் செய்யுட்களால், திருவாசகத்தை உள்ளுணர்ந்து ஓதுவா ரெவராயிருப்பினும், அவர் வேறெங்குங் காணாத ஒரு பேரின்பம் எய்தித் தம் உடம்பும் உயிருமெல்லாம் அதன் வயமாய் நிற்கப் பெறுவரென்பதூஉம், மக்களாற் காணவுங் கருதவும் இயலாத இறைவனை அவர் எளிதிலே தமதகத்துக் கண்டு அவனோடு ஒருமைப்பட்டு நின்று பேரின்ப வாழ்விற் பிரிவின்றி வாழ்வரென்பதூஉம் நன்கு தெருட்டப்பட்டமை காண்க.
இங்ஙனமாகத், தன்னை ஓதுவா ருள்ளத்தையும் உணர்வையும் உயிரையுமெல்லாம் பேரின்ப வுருவாக்குந் திறம் ஏனை எந்த நுல்களுக்கும் வாயாமல் திருவாசகத்திற்கு மட்டும் வாய்த்ததென்னையெனின்; இவ் வுலக வாழ்க்கையில் வரும் இன்ப நுகர்ச்சிகளில் எங்கும் புலனாகாத ஒரு பேரின்பம் இதனை யோதுவா ரெல்லாரிடத்தும் பிறழாது நிகழக் காண்கின்றே மாகலானும், அ