கதையைவிட இன்பம் பயப்பது எதுவுமில்லை. கதை கூறுபவன் திறமுடையவனானால் இளைஞரையும் முதியோரையும், ஆடவரையும் பெண்டிரையும், அரசர் பெருமக்களையும் ஆண்டிகளையும் தன்வயப்படுத்துவது எளிது.
கதை, இன்பந்தருவது மட்டுமன்று; அவ்வின்பத்தின் வாயிலாக மாந்தர் அறிவுநலத்தையும் உணர்ச்சி நலத்தையும் தூண்டி அவர்களறியாமலேயே அவர்களின் உள்ளார்ந்த தன்மைகளை இயக்கி உருப்படுத்துவதிலும் கதைக்கு இணையானதாக எதுவுமில்லை. கலைத் திறங்குன்றிய நீதியாளர் இது செய்க, இது செய்யற்க எனக் கூறும் கூற்றுக்கள் மக்கள் அறிவைக்கூடத் தூண்டுவதில்லை. உணர்ச்சியைத் தூண்டுவதும் செயலாட்சி செய்வதும் அதனினும் எவ்வளவோ தொலைவு. கதையின் இவ்வாற்றலறிந்து சிறந்த நீதியாளர் அதனைக் கையாளுகின்றனர்.
ஆனால் மக்கள் உள்ளத்தில், சிறப்பாகத் தொய்வு மிக்க இளைஞர் உள்ளத்தில் உயர்குறிக்கோ ளுணர்ச்சி உண்டு பண்ண வேண்டுமானால் கதைக்குப் புறம்பாகவோ கதையி னுள்ளோ நீதி தனிப்படத் துண்டாகக் கூறப்படுதல் கூடாது. கதை கூறுபவர் கதையைமட்டும் கூறிச்செல்லல் வேண்டும். அதைக் கூறும் முறையில் நீதிகள் தாமாகவே உயர்வாழ்க்கைக் குறிக்கோள் உருவில் வாசி