இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்தில் வரும் 89-ஆவது பாடல் முதல் 94-ஆவது பாடல் முடிய ஆறு பாடல்களின் விளக்கத்தைக் காணலாம். இந்தச் சொற்பொழிவுகளில் புராணக் கதைகளின் உள்ளுறையை அங்கங்கே விளக்கியிருக்கிறேன். பழைய கதைகளையும் புதிய கதைகளையும் எடுத்துக் காட்டிக் கருத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஏற்ற உவமைகளால் பொருளைப் புலப்படுத்த முயன்றிருக்கிறேன். பாடல்களில் வரும் வரலாறுகளைச் சற்று விரிவாகச் சொல்லியுள்ளேன். கண்ண பிரான் வலம்புரியோசை செய்த வரலாற்றை ஐயங்கார் பாகவதத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறேன்.
பட்டோலையில் கணக்கு எழுதுதல், குற்றம் செய்தாரை விலங்கு பூட்டித் தண்டித்தல், இரண்டு விலங்கு பூட்டுதல், காதல் மடந்தையைக் களவாக எடுத்து வருதல், கொடியைக் கையிற் பிடித்தல், படைகளால் மண்டலமிட்டுச் சூழ்தல், அச்சத்தால் உருண்டு ஓடுதல், குழந்தையின் இடையில் கிண்கிணியைக் கட்டுதல், குறமகளிர் தினைக்கொல்லையைக் காத்தல் ஆகிய வழக்கங்கள் பாட்டிலுள்ள செய்திகளால் தெரியவருகின்றன.
கருத்துக்களை விளக்கும்போது திருக்குறளும், பரிபாடலும், தேவாரமும், திருவாச கமும், பெரிய புராணமும் மே