செம்பொன் மேனி; சிறிய உருவம்; பெரிய ஆத்மா; உடைந்த பல்; உரத்த சிரிப்பு; ஒற்றையாடை; மூப்படைந்த இளைஞர்; ஓய்வுகாணாத உழைப்பாளி. இவர் காந்தி.
ஆஜானுபாகு; அகன்ற நெற்றி; பரந்த கண்கள்; ரிஷப நடை; அரசனாக ஆளவேண்டியவர்; துவராடை யுடுத்த துறவியானார். உலகத்தைத் துறந்து விட வில்லை; உலகத்திலே வாழ்ந்தார்; உலகத்திற்காக வாழ்ந்தார். இவர் விவேகானந்தர்.
இருவரும் பாரத ஜாதியின் பிரதிநிதிகள்; அதன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள்; இந்திய மக்களின் இருதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஐம்பது வருஷங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம். இரண்டு பேர், பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கப்பலேறினார்கள். கப்பலேறிய போது இவர்களை உபசரித்து வழியனுப்பியவர்கள் யார்? நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுமாகிய ஒரு சிலர்தான். இவ்விருவரையும் பற்றிப் பொது ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது. இந்தப் பெரிய மனிதர் அந்த ஊருக்குப் பயணமானார், அந்தப் பெரிய மனிதர் இந்த ஊருக்கு வந்திறங்கினார் என்று இப் பொழுதைய பத்திரிகைகள் வெளியிடுகின்றனவே, அதைப் போல் அந்தக் காலத்தில் இவ்விருவரும் கப்பலேறியதை எந்தப் பத்திரிகையும் வெள