தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி. சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்றும், "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச் சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும், திவ்வியப் பிரபந்தத்தாலும் பெருமை பெற்ற தலங்கள் பல பாடல் பெற்ற தலங்களுக்கு ஏனைய தலங்களை விடச் சிறப்பு மிகுதி. திருஞானசம்பந்தரும், அப்பர் சுவாமிகளும், சுந்தரமூர்த்தி நாயனாரும் பல தலங்களுக்குச்சென்று தரிசித்துப் பல பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். கற்கோயில்களாகிய அவற்றின் பெருமையைச் சொற்கோயில்களாகிய அருளாளர் திருப்பாடல்கள் சிறப்பிக்கின்றன. எல்லாக் காலத்திலும் எவ்விடத்திலும் அந்தப் பாசுரங்களை ஓதி இன்பம் காணலாம்.
அத்தகைய திருப்பாடல்களை வேதத்துக்குச் சமானமாக வைத்துப் போற்றுவார்கள், தமிழர்கள். அந்தப் பாடல்கள் இறைவனுடைய பெருமையை எடுத்து உரைப்பதோடு பல அரிய உபதேச உரைகளையும் கொண்டிருக்கின்றன. செந் தமிழ்ப் பாவாக அமைந்திருப்பதால் &