இவ்வரிய பெரிய உபந்யாசம் வேதாந்த சித்தாந்த அதிஅவசிய நுட்பப்பொருளை யாவரும் இனிதறியும்படி எளிதாக விளக்குதலால், இது தென்னாட்டில் தத்துவ விசாரணை செய்வார் எல்லார்க்கும் மிகவும் பயன்படுமாகலின், இதனை அவசியம் புத்தக உருவாகப் பிரகடனஞ் செய்தல் வேண்டுமென, இச்சபையின் காரிய நிருவாகசபை அங்கத்தினர்களான ஸ்ரீமான். அ. மதுரைநாயகம் பிள்ளை யவர்களும், ஸ்ரீமான். த. மகாதேவ பிள்ளை யவர்களும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதனால் இஃது அவ்வாறே வெளியிடப் படுகின்றது.
சிவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு, ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங்களுமாம். அதிபரிபக்குவ முடையார்க்கு இன்றியமையாது வேண்டப்படும் முடிபொருளை யுணர்த்தும் வேதத்தின் ஞானகாண்டப் பகுதியே வேதாந்த மெனவும், அதிதீவிர
பரிபக்குவமுடையார்க்கு அங்ஙனமே முதன்மையாகப் பெறக் கிடந்த சிவப் பேற்றை உணர்த்தும் சிவாகமப் பகுதியே சித்தாந்தம் எனவும் அறிவுடையோரால் வழங்கப்பĩ