இராமலிங்க அடிகளைத் தமிழர்கள் பலர் ஒரு அவதார புருஷராகவே நினைக்கின்றனர்; ஒரு தீர்க்கதரிசியாகப் போற்றுகின்றனர். அவருக்குப் பல இடங்களிலே கோவில்கள்; பல இடங்களிலே உருவச்சிலைகள்; பல இடங்களிலே பஜனை மடங்கள்; பல இடங்களிலே அவர் படத்திற்குக் கற்பூர தீபாரதனைகள்; பூஜை நைவேத்தியங்கள் அவர் பெயரால் பல சங்கங்கள், பல புத்தக சாலைகள், பல வியாபார தலங்கள் இன்று விளங்குகின்றன.
ஆண்டாண்டு தோறும் வடலூருக்குச் செல்லும் அடியார் களின் கூட்டம் வளர்ந்து வருகின்றது. அவருடைய அருட் பாவைப் பாராயணம் செய்வோர் பெருகி வருகின்றனர். எங்கும் அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்ற முழக்கம் கேட்கின்றது.
சாதிவெறி கொண்டவர்கள் பலர்; சமயவெறி கொண்டவர்கள் பலர்; ஆச்சாரவெறி பிடித்தவர்கள் பலர்; வகுப்புவாதம் பேசும் அரசியல்வாதிகள் பலர்; பொதுமக்களிடம் ஏமாற்றிப் பொருள் பறிப்போர் பலர்; தமது கடமையை மறந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் பலர்; உழைப்பவர்களிடம் கருணை காட்டாதவர்கள் பலர் இன்று இராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக விளங்குகின்றனர்.