வழக்கத்திற்கு விரோதமாக ஒரு நாள் என்னைக் கண்டதும், "அகோ, வாரும் பிள்ளாய்" என்றார் 'தினமணி கதி'ரின் பொறுப்பாசிரியரான திரு. சாவி அவர்கள்.
"அடியேன் விக்கிரமாதித்தனா, என்ன? என்னை 'அகோ, வாரும் பிள்ளாய் ' என்கிறீர்களே?" என்றேன் நான்.
"அது தெரியாதா எனக்கு? 'பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளைப் பின்பற்றி 'மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்' என்று எழுதினால் எப்படியிருக்கும்?"
"பேஷாயிருக்கும்"
"சரி, எழுதும் "
"என்னையா எழுதச் சொல்கிறீர்கள்?"
"ஆமாம்."
"எந்த எழுத்தாளரும் தமக்கு உதித்த யோசனையை இன்னொருவருக்கு இவ்வளவு தாராளமாக வழங்கி நான் பார்த்ததில்லையே?"
"அதனால் என்ன, என்னிடம் யோசனைக்குப் பஞ்சமில்லை; எழுதும் " என்றார் அவர்.
"நன்றி " என்று நான் அவருடைய யோசனைக்கு நன்றி தெரிவித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒராண்டு காலம் அது 'கதி'ரில் தொடர்ந்தது. பலர் அதை விழுந்து விழுந்து படிக்கவும் செய்தார்கள்; சிலர் அதற்காக என் மேல் விழுந்து விழுந்து கடிக்கவும் செய்தார்கள். ஏன்?
இதற்கு நான் பதில் சொல்வதைவிட, அமரர் கல்கி அவர்கள் இன்றல்ல- இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லி விட்&