புதுச்சேரியிலிருக்கும் ஸ்ரீ சுத்தானந்த பாரதியாரையும் அவருக்கு ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடல்களிலுள்ள பிரேமையையும் அறியாதவர்கள் இல்லை. அவர் இந்த நூலைப் பாரதி பாடல்களுக்கு முகவுரையாக எழுதியனுப்பினார்கள். பிறகு, தனி நூலாக அச்சிடுவது மேல் என்ற எங்கள் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஸ்ரீ சுப்பிர மணிய பாரதியாரின் பாடல்களின் பெருமைகளை நன்கு அறிந்து அவற்றால் பெறக்கூடிய முழுப்பலனையும் பெறுவதற்கு இந்நூல் இன்றியமையாததாகும். ஆதலால், பாரதி பாடல்களை வாங்கி வாசிப்போர் அனைவரும் இந் நூலையும் அதற்கு அனுபந்தமாகக் கொண்டு வாங்கி வாசிப்பார்கள் என்று நம்புகிறோம்.
பொதிகைத் தென்றலில் சங்கக்கொடி ஆடுகிறது; கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது; மாணிக்க வீணை தேனிசை பொழிகிறது; உள்ளப் பெருமானைப் பள்ளி எழுப்புகிறது. "தேசமுடையாய் திறவேலோ ரெம்பா வாய் " என்று கோதைக்கிளி கொஞ்சுகிறது. "நாமார்க் குங் குடியல்லோம் நமனையஞ்சோம் நரகத்தில் இடர்ப் படோம் " என்று திருத்தொண்டர் முழங்குகின்றனர் . இங்குமங்கும் பண்டிதர் செவி மடுக்கின்றனர்.
மற்றெங்கும் இருட் போர்வை; பாழ்பட்ட பழங் கோட்டையில் சவ உ&