சிதம்பரம் நடராஜா சந்நிதி; உள்ளம் சிலிர்க்கும் காட்சி; சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியின் தூக்கிய திருவடியும், அபயக்கரமும், புன்னகையமுதும், அருட்பார்வையும், கருணை முகமும் அன்பருக்குப் பேரின்பமளிக்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார், பட்டினத்தார், தாயுமானார் முதலிய அடியார் பாடிப்பரவிய திருச்சந்நிதி அதுவே; வாழையடி வாழையாய் வந்த அத்திருக்கூட்ட மரபில் ஒருவர் இன்று அங்கே தோன்றியிருக்கிறார் - 'சிற்சபேசா, சிவசிதம்பரம்' என்று அடியார் ஆர்க்கும் அச்சந்நிதியில் ஒரு மெய்யன்பர் உள்ளுருகி நிற்கிறார் அவரே மருதூர் இராமையபிள்ளை. அவர் கையில் ஓர் அமுதக்கனி பொலிகிறது; அருட்சோதிக்கனி; இரக்கமே வடிவான கருணைக்கனி; தளிர்மேனி; பிஞ்சிளமை. கொஞ்சும் திருமுகம்; காந்தக் கண்கள்; எழிலார் புன்னகை; இந்த ஜோதிக்கனியே உலகுய்ய வந்த இராமலிங்கம். அப்பைய தீட்சிதர் கற்பூர ஒளி காட்டுகிறார் அன்பர் 'ஹரஹர மகாதேவா, சோதியே சுடரே' என்று ஆர்க்கின்றனர். இராமலிங்கம் ஆனந்த நடனசிகாமணியை அள்ளிப்பருகுவது போலப் பார்க்கிறான். கற்பூர தீபங் கண்டு கண்டு களி நகை பொங்குகிறான். ஆன்மத்